Karim74's Weblog

my articles

தேவாம்ருதம்.

A touching story in today’s Dinamani magazine

தேவாம்ருதம்.
********
அவசியம் படிக்க வேண்டிய பாசக்கதை👍👍

காய்ச்சிய பாலில் புத்தம் புதிதாக இறக்கிய டிக்காஷனையும் சுகர் ஃப்ரீயையும் கலந்து ஆவி பறக்க, மணக்க மணக்க காபியை மாமனார் எதிரே இருக்கும் டீப்பாயில் கொண்டு வந்து வைத்தாள் காயத்ரி.
ஆவி பறக்கும் அந்தக் காபியை ரசித்துச் சுவைத்தபடியே அன்றைய செய்தித் தாளில் மூழ்கி விடுவார், எழுபத்து ஐந்து வயதைக் கடந்துவிட்ட வெங்கட்ரமண தீட்சிதர்.

அதன் பிறகு அவரது மருமகளான காயத்ரியின் கைக்காரியங்கள் அத்தனையும் சாட்டையிலிருந்து விடுபட்ட பம்பரம்தான்!

விஷ்ணு சகஸ்ரநாமத்தையோ, கந்த சஷ்டி கவசத்தையோ ஜெபித்தபடி, முதல் நாள் மாமனார் கொடுத்த லிஸ்ட் பிரகாரம் சாம்பார், ரசம், பதார்த்தங்களை மணக்க மணக்கச் செய்து, பத்து அல்லது பதினோரு மணி அளவில் மாமனார் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு, சாப்பிடக்கூடிய அளவிற்கு ஹாட் பேக்கில் எடுத்து வைத்துவிட்டு, அதேபோன்று இன்னொரு ஹாட் பேக்கில், அடுத்த தெருவில் குடியிருக்கும் கிட்டத்தட்ட எழுபது வயது நிரம்பிய தனது தாயார் மீனாட்சியம்மாளுக்கும் எடுத்து வைத்துக்கொண்டு, தானும் ஒரு கவளம் வாயில் போட்டுக்கொண்டு, மதியம் சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு டிபனையும் டப்பாவில் போட்டுக்கொண்டு அலுவலகம் கிளம்பும்போது காலை மணி சரியாக ஒன்பது ஆகிவிடும்!

இதற்கிடையே ஐந்து வயது நிரம்பிய தனது குழந்தை பவித்ராவை எழுப்பி அவள் காலைக் கடன்களை முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அன்றைய பாடத்தைப் படிக்க வைத்து, சீருடையை அணிய வைத்து எட்டரை மணிக்கு வரும் பள்ளிப் பேருந்தில் அனுப்பி வைத்தாக வேண்டும்!

இடையில் அம்மாவிற்காக தயார் செய்த உணவை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, அவசர அவசரமாக, அலுவலகம் நோக்கிப் பறந்தாக வேண்டும்!

மனைவியை இழந்த வெங்கட்ரமண தீட்சிதர் ஒருபுறம், கணவனை இழந்த மீனாட்சியம்மாள் ஒருபுறம்! அமெரிக்காவில் வேலை பார்க்கும் காயத்ரியின் கணவனும், வெங்கட்ரமண தீட்சிதரின் மகனுமாகிய பாலசுப்ரமணியன் ஒருபுறம், காயத்ரியின் ஒரே மகள் பவித்ரா ஒருபுறம், இவர்களுக்கு மத்தியில் எந்தவித சலனமோ சலிப்போ இல்லாமல் சந்தோஷமாகவே தனது வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி!
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் எப்போதும்போல, அன்றும் காயத்ரி தன் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டாள்.

அவள் விடை பெற்றுச் சென்ற அடுத்த கணமே வெங்கட் ரமண தீட்சிதர் தன் இருக்கையை விட்டு எழுந்தார். ஸ்நானம் செய்தார். அன்றாட அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டார். காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி வெகுநேரம் இறைவன் முன்னால் இரு கரங்களையும் கூப்பியபடி தியானித்தார். பிறகு தன்னையும் அறியாமல் இறைவனிடம் இறைஞ்சினார்!

“இறைவா நான் உன்னிடம் பெரிதாக என்ன வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விட்டேன்? வீடு வாசல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா? நிலம் நீச்சு வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா? காசு பணம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேனா? எதுவுமே பெரிதாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவில்லையே இறைவா! நான் பெற்ற என் மகனுக்கு சரஸ்வதி கடாஷத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய். நல்ல உத்யோகத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய்! நல்ல சம்பாத்யத்தைக் கொடு என்று கேட்டேன். கொடுத்தாய்! நல்ல புத்தியைக் கொடு என்று கேட்டேன். கொடுக்காமல் போய் விட்டாயே இறைவா! நான் என்ன பாவம் செய்தேன் இறைவா? ஸ்ரீவித்யா உபாசகனான எனக்குப் போய் ஏன் இந்த சோதனை இறைவா?

முதல் நாள் அமெரிக்காவிலிருந்து அவரது மகன் அனுப்பிய ஓர் இ.மெயிலைப் பார்த்துத்தான் அவர் இறைவனிடம் அந்தக் கதறு கதறினார்!

அன்புள்ள அப்பாவிற்கு,

நமஸ்காரம். இன்னும் மூன்று மாதத்தில் நான் சென்னை வர உள்ளேன். அதற்கு முன்னால் சில காகிதங்களை அனுப்பி வைக்கிறேன். அதில் காயத்ரியைக் கையெழுத்துப் போட்டுத் தயாராக வைத்து இருக்கச் சொல்லவும். அது வேறொன்றும் இல்லை. எங்களது விவாகரத்துப் பத்திரம்தான்! ஆம். இனிமேலும் அவளோடு சேர்ந்து வாழ என்னால் இயலாது. நான் எத்தனையோ முறை அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லிவிட்டேன். குழந்தையை அழைத்துக்கொண்டு நீயும் அமெரிக்காவிற்கு வந்து விடு. நாம் இருவரும் சேர்ந்தே இங்கு குடும்பம் நடத்தலாம். என் அப்பாவையும் உன் அம்மாவையும் ஏதாவது ஓர் உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால் அவள் பிடி கொடுத்து பேசவே மாட்டேன் என்கிறாள். இனிமேலும் என்னால் இங்கே தனியாக வாழ முடியாது. ஒன்று அவள் இங்கே வர வேண்டும். இல்லை அவள் என்னை விவாகரத்து செய்துவிட வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தே ஆக வேண்டும். அவள் அங்கு இருக்கும்பட்சத்தில் அவள் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அநேகமாக அவள் அதைத்தான் விரும்புகிறாள்போலும். குழந்தையை அவள் இஷ்டப்படி அவளே வைத்துக்கொண்டாலும் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. நானும் இங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகிறேன்! இதை அவளிடம் கறாராகச் சொல்லி விடுங்கள். நான் அங்கு வரும்போது இரண்டில் ஒன்று முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இப்படிக்கு
பாலு.

இப்படிப்பட்ட செய்தியைப் படித்துவிட்டுத்தான் மனம் பதைபதைத்துப் போனார் வெங்கட்ரமண தீட்சிதர்.
அதனால்தான் இறைவனிடம் கத்தினார்; கதறினார். நேரம் போவதே தெரியாமல் இறைவன் முன் அமர்ந்து அழுதார், புலம்பினார்!

உணவை மறந்தார். உறக்கத்தை மறந்தார். தன்னை மறந்தார். அமர்ந்தது அமர்ந்தபடி அங்கேயே இறைவனோடு இறைவனாக லயித்துவிட்டார்!

மாலை காயத்ரி வீடு திரும்பினாள். மாமனார் பூஜை அறையிலேயே அமர்ந்து இருப்பதைக் கண்டு திடுகிட்டாள். சாப்பாடு வைத்தது வைத்தபடி இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள்!

“என்னப்பா, உடம்பு சரியில்லையா? சாப்பிடக்கூட இல்லையே!” எனக் கூறியபடியே, அவர் அருகில் சென்றாள்.

“ஒன்றுமில்லையம்மா” எனக் கூறியபடியே மெல்லத் தடுமாறியபடியே எழுந்தார்!

அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்தாள் காயத்ரி. உடம்பு லேசாகச் சுட்டது!

“அப்பா, ஜுரம் இருக்கிறது அப்பா! டாக்டரிடம் அழைத்துச் செல்லட்டுமா?”

“அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா. கொஞ்சம் படுத்தால் சரியாகிவிடும்!”

“சரி… படுங்கள். இப்போது சூடாக ஒரு காப்பி போட்டுத் தருகிறேன். சாப்பிடுங்கள். ராத்திரி கண்ட திப்பிலி ரஸமும் சுட்ட அப்பளமும் செய்து தருகிறேன் சாப்பிடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்” எனக் கூறியபடியே அவரை மெதுவாக சாய்வு நாற்காலியில் அமர வைத்தாள்.

“ஐயோ, பெற்றெடுத்த மகள்கூட இப்படி தாங்கு தாங்கு என்று தாங்க மாட்டேளே! இந்த மஹாலஷ்மியைப்போய் விவாகரத்து செய்யப் போகிறேன் என்கிறானே! பாவி.. மஹாபாவி” எனத் துடித்துத்தான் போய்விட்டார் தீட்சிதர்!

இரவு சாப்பிட்டுவிட்டு நன்றாகத் தூங்கிவிட்டார்.

மாமனார் மனதை ஏதோ ஒரு விஷயம் சஞ்சலப்படுத்துகிறது என்பதை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டாள் காயத்ரி!

நாள்கள் வேகமாக ஓடின. மூன்று மாதங்கள் ஓட்டமாய் ஓடிவிட்டது! பாலசுப்பிரமணியன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தான்.

இரண்டு, மூன்று நாள்கள் யாரும் யாருடனும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை!

நான்காவது நாள் இரவு நேரத்தில் காயத்ரிதான் வலியச் சென்று பாலுவிடம் பேசினாள்.

“பாலு உங்களிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும்”.

“உன்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை! எல்லாவற்றையும் அப்பாவிடம் சொல்லிவிட்டேன். அப்பா உன்னிடம் சொன்னாரா? இல்லையா?”

“அப்பா வாயைத் திறந்து என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், உங்கள் இ.மெயிலை நான் படித்துவிட்டேன்!”

“பிறகு என்ன? நான் அனுப்பிய பத்திரத்தில் கையெழுத்துப் போட வேண்டியதுதானே?”

“போடுகிறேன். ஆனால் அதற்கு முன்னால் ஒரு நிபந்தனை!”

“என்ன?”

“உங்களை விவாகரத்து செய்த பின்னால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதுகுறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால், நம் குழந்தையும் உங்கள் அப்பாவும் என்னோடுதான் இருக்க வேண்டும். உங்கள் அப்பாவை எக்காரணம் கொண்டும் முதியோர் இல்லத்தில் சேர்க்க நான் அனுமதிக்க மாட்டேன்! பத்திரத்தில் இந்த நிபந்தனையையும் சேர்த்து விடுங்கள். இதோ இப்போதே கையெழுத்துப் போட்டு விடுகிறேன். ஆனால், நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இது உறுதி! சம்மதமா?”

“என் அப்பாவைப் பற்றி உனக்கென்ன கவலை?”

“எப்போது உங்களைத் திருமணம் செய்து கொண்டேனோ, அப்போதே உங்கள் அப்பா என் அப்பா ஆகிவிட்டார், உங்கள் விருப்பப்படி உங்களைத்தான் என்னால் விவாகரத்து செய்ய முடியும். உங்கள் அப்பாவைப் போன்ற ஒரு மஹானை என்னால் இழக்க முடியாது! இந்த வயதான காலத்தில் அவருக்குத் துணையாக நான் இருந்துதான் ஆக வேண்டும். அதேசமயத்தில் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்க முடியாது! அதேநேரத்தில் இந்த முதிர்ந்த வயதில் அவர்களை நாம் வெளிநாட்டிற்கும் அழைத்துச் செல்ல முடியாது!

“அதான் அவரை ஓர் உயர்தர முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று சொன்னேனே!”

“பாதுகாப்பாக இருக்கட்டும் என எண்ணி உங்கள் இரு கண்களையும் ஏதாவது ஒரு பேங்க் சேப்டி லாக்கரில் வைத்துவிட்டு, உங்களால் வெளியில் செல்ல முடியுமா?”

“என்ன சொல்கிறாய் காயத்ரி?”

“ஆம். என் அம்மாவும் சரி, உங்கள் அப்பாவும் சரி, எனக்கு இரு கண்கள். அவர்களை வங்கி பேங்க் சேப்டி லாக்கரில் வைப்பதுபோல், ஒரு முதியோர் இல்லத்தில் வைத்துவிட்டு, நாம் வெளியூர் செல்வதை ஒருநாளும் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் நம் வழிகாட்டிகள்! உயிர் உள்ள ஜீவன்கள்! அவர்கள் எப்போதும் நம் கூடவே இருந்து நம்மை வழிநடத்திச் செல்லக்கூடிய மஹான்கள்! அவர்களைப் போய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு நாம் மட்டும் வெளிநாடு சென்று சுகமாக வாழலாம் என்கிறீர்களே, உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? இந்த அளவுக்கா உங்கள் மனதில் ஒரு சுயநலம் புகுந்து விளையாட வேண்டும்? இப்படியும் ஒரு வெளிநாட்டு மோகமும் பணத்தாசையும் நமக்குத் தேவைதானா?”

காயத்ரி மேலும் தொடர்ந்தாள்…

“எப்பேர்ப்பட்ட மஹான் உங்கள் தந்தை? அப்படிப்பட்டவருக்குப் போய் இப்படி ஒரு இ.மெயிலா? அவர் மனம் என்ன பாடுபட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுநாள்வரை அந்த மஹான் அந்த இ.மெயிலை என்னிடம் காட்டக்கூட இல்லை! அது தெரியுமா உங்களுக்கு? நான்தான் அவர் மனம் படும்பாட்டைப் புரிந்துகொண்டு, அவர் இல்லாத நேரத்தில் அதைப் படித்துத் தெரிந்து கொண்டேன்! கடந்த மூன்று மாதகாலமாக அந்தப் பெரியவர் ஊன் உறக்கமின்றி தவியாய் தவித்துப் போய்விட்டார் பாலு!”

“போதும் காயத்ரி போதும், என்னை மன்னித்து விடு, நான் மகாபாவம் செய்துவிட்டேன்! அப்பாவிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடுகிறேன். உடனடியாக அமெரிக்கா வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, சென்னையிலேயே செட்டில் ஆக முயற்சி செய்கிறேன். நான், நீ, குழந்தை, என் அப்பா, உன் அம்மா எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கலாம். என்னை மன்னித்து விடு காயத்ரி என்னை மன்னித்து விடு!”

கதவின் ஓரத்தில் நின்று கொண்டு இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார் வெங்கட்ரமண தீட்சிதர்.

“கடவுளே கடந்த மூன்று மாத காலமாக இந்தப் பிரச்னையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேனே! என் மருமகள் காயத்ரி மூன்றே நிமிடத்தில் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு விட்டாளே! தெய்வமே நான் உன்னிடம் அமுதத்தைத்தான் யாசித்தேன். ஆனால், நீ தேவாமிருதத்தையே கொடுத்துவிட்டாய்! உன் கருணையே கருணை!” உருகித்தான் போய்விட்டார் தீட்சிதர்!
===============
ஷிவ்ராம்

Great writer. Hats off to him.
நட்புடன்.
ச.கணேசன். மதுரை.🙏🏾🙏🏾

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: