Karim74's Weblog

my articles

.ராஜா முகம்மது: பாசம்

Inbox message 
சில தினங்களுக்கு முன், திண்டுக்கலில் அவரை சந்தித்தேன். நண்பரின் ‘பல்சர்’ பஞ்சராக, அந்த நள்ளிரவில், ‘டூ- வீலர் பஞ்சர் கடை’ போஸ்டர் கண்களுக்கு அகப்பட்டது. 
அதில் தரப்பட்டிருந்த அலைபேசி எண்ணுக்கு தயக்கத்துடன் அழைத்தேன். மூன்றாவது ரிங்கில், ‘ஹலோ’ சொன்ன குரல், இடத்தை மட்டும் கேட்டுக் கொண்டு இணைப்பை துண்டித்தது. அடுத்த சில நிமிடங்களில், ‘நான்கு சக்கர ஸ்கூட்டி’ ஒன்று எங்கள் முன் நிற்க, அதிலிருந்து தவழ்ந்து வந்தார் மாற்றுத்திறனாளி ராஜா முகம்மது. அடுத்த இருபது நிமிடங்களில் வண்டி தயாராக, தாராள மனதுடன், 200 ரூபாய் நீட்டினார் என் நண்பர். ’70 ரூபாய் போதும் சார்’ என்றார் ராஜா முகம்மது. அடுத்த நாள் காலை, ராஜா முகம்மதுவை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
உங்க பலம் என்ன?

என் குடும்பம் தான் என் பலம். கூடப்பிறந்த ரெண்டு அக்காவும், தங்கச்சியும் மட்டும் இல்லேன்னா, என் வாழ்க்கை மண்ணோட மண்ணா போயிருக்கும். ஒன்றரை வயசுல வந்த காய்ச்சல்ல, கால் ரெண்டும் செயலிழந்து போச்சு; கொஞ்ச நாள்ல, அம்மாவும் உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாயிட்டாங்க. அதுக்கப்புறம், என் அக்காங்க தான் எனக்கு அம்மாவா இருந்து என்னை பார்த்துக்கிட்டாங்க. என் தங்கச்சி தான், தினமும் என்னை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக்கிட்டுப் போகும்! எனக்கு இப்போ, 29 வயசாகுது. ஆனாலும், பெத்த புள்ளையை பார்த்துக்கிற மாதிரி தான், இப்பவும் என்னை அவங்க பார்த்துக்கிறாங்க. சகோதரனின் பேச்சை ஆர்வத்துடன் ரசிக்கும் சகோதரிகள் மூவரிடமும், பெருமித புன்னகை. பஞ்சர் ஒட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான், தன் வீட்டு செலவுகளை சமாளிக்கிறார் ராஜா முகம்மது. அக்கா நாகூர் அம்மாளும், சையது அலி பாத்திமாவும் வீட்டு வேலைகளுக்குச் சென்று, தங்களால் இயன்றதை சகோதரனுக்கு தருகின்றனர். இதில் சையது அலி பாத்திமா, தன் சகோதரனுக்கு பக்கபலமாக இருக்க எண்ணி, தனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்து வருகிறார். ஆனால், ராஜா முகம்மது உள்ளிட்ட குடும்பத்தாருக்கு அவரது முடிவில் உடன்பாடு இல்லை.
உங்க முடிவு, உங்க எதிர்காலத்தை பாதிச்சிடாதா பாத்திமா?

மூத்த அக்காவுக்கு வயசாயிடுச்சு. அவ கணவர் வெளியூர்ல இருக்கிறதால, எங்க கூட தான் அவ இருக்கிறா! தங்கச்சி, ‘நிக்காஹ்’ பண்ணிட்டு, தனியா போயிட்டா! இப்போ நானும் போயிட்டா, இவனைப் பார்த்துக்க யார் இருக்கா? நினைச்ச நேரத்துக்கு, புருஷன் வீட்ல இருந்து வந்து இவனை பார்த்துக்க முடியுமா? ‘எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்’னு, மாப்பிள்ளை இப்போ சொல்லலாம். ஆனா, சொன்ன வாக்குல கடைசி வரைக்கும் உறுதியா இருப்பாங்களான்னா அது சந்தேகம் தான்! எனக்கு, என் தம்பி சந்தோஷமா இருக்கணும். அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமையுற வரைக்கும், நான் இப்படியே இருந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அக்காவின் பேச்சை ஆமோதிக்கவில்லை என்றாலும், அமைதியாகவே இருக்கிறார் ராஜா முகம்மது. சகோதரிகளுக்கு அடுத்து இவரது பலம்…நண்பர்கள். இரவு நேரங்களில் பஞ்சர் போட அழைத்துச் செல்வது, ஆட்சியரிடம் மனு கொடுத்து, நான்கு சக்கர வண்டி வாங்கித் தந்தது என, இவரின் வாழ்வில் நண்பர்களின் பங்கு மிக முக்கியமானது.
‘ஏன்டா பொறந்தோம்’னு நினைச்சிருக்கீங்களா…?

ராத்திரி, 12:00 மணிக்கு பஞ்சர் போட கூப்பிடுவாங்க. வேலையை முடிச்சுட்டு, 70 ரூபாய் கேட்டா பேரம் பேசி, 40 ரூபாய் தான் தருவாங்க. சில நேரங்கள்ல, ‘கையில பணம் இல்லை; நாளைக்கு நேர்ல வந்து தர்றோம்’னு சொல்லிட்டுப் போவாங்க. ஆனா, இதுவரைக்கும் அப்படி சொல்லிட்டு போன யாருமே, அடுத்த நாள் வந்து பணம் தந்தது இல்லை. வேலைக்குண்டான காசை தராம பேரம் பேசுற போதும், ‘நாளைக்கு தர்றேன்’னு சொல்லி அவங்க ஏமாத்துற போதும், மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அந்தமாதிரி சமயங்கள்ல, ‘இப்படியொரு வாழ்க்கையை ஏன் தந்தீங்க?’ன்னு, அந்த அல்லாஹ் கிட்டே கேட்டுக்குவேன்! தனக்கு கால்கள் நன்றாக இருந்திருந்தால், நல்ல வருமானம் தரக் கூடிய வேலைக்கு சென்றிருக்கலாம். அதன்மூலம் குடும்ப கஷ்டங்களை ஓரளவுக்கு சமாளித்திருக்கலாம் என்ற ஆதங்கம், ராஜா முகம்மதுவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
உடல் ஊனம் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு தடையா?

ஒரு ஓட்டலுக்கு வேலைக்குப் போயிருந்தேன். காய்கறி வெட்டுறதுல இருந்து பாத்திரங்களை கழுவி வைக்கிறது வரைக்கும், எல்லா வேலையும் செஞ்சேன். ஆனா, எனக்கு பாதி கூலி தான் கொடுத்தாங்க. காரணம் கேட்டப்போ, ‘நீ உட்கார்ந்துட்டு தானே வேலை பார்த்தே’ன்னு சொன்னாங்க. இந்த சூழல்லேயும், நான் வேலை செஞ்சதை அவங்க பார்க்கலை. என் கால்ல இருக்கிற ஊனத்தை தான் பார்த்தாங்க. இப்போ, நீங்க சொல்லுங்க; உடல் ஊனம் வளர்ச்சிக்கு தடை தானே! ம்ஹும்… அதான் நானே சொந்தமா பஞ்சர் கடை ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். பணத்துக்கு அல்லாஹ் வழிகாட்டுவார்னு நம்பிக்கையிருக்கு!முகம்மதுவை இதுவரை சோதித்த காலம், இனியாவது அவருக்கு ஆதரவான சூழலை தர வேண்டும் என்பதே நம் விருப்பம்!
பி.ராஜா முகம்மது: பாசம்

95781 91952

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: