Karim74's Weblog

my articles

Truth

அண்ணன் ரெபல் ரவி வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துவிட்டு டிபன்ஸ் காலனியை  ஒட்டி நடந்துகொண்டிருந்தோம்.  ராஜ்கிரண்  வீட்டை ஒட்டியிருந்த பல வீடுகளில் மதில்கள் விழுந்து கிடந்தன. மரணம் நிகழ்ந்த ஒன்றிரண்டு வீடுகளில் சலனமே இன்றி ஆட்கள் நடந்துகொண்டு இருந்தார்கள். வா டா வந்து ஒருக்கா பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை எல்லாம் பாரு என்று நிர்பந்தித்துக்கொண்டே இருந்தார் ரவி.

பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை , ஆற்றங்கரை ஒட்டிய குடியிருப்புகள் எல்லாம் எந்த அளவிற்கு வெள்ளப்பேரிடர் காலங்களில் பாழாகும் என்பதற்கு Typical example. உள்ளே நுழையும்போதே யார் என்ன ? எதற்கு வந்தீர்கள் ? என்று இளந்தாரிகள் கேள்விகளை அடுக்கினார்கள். ஊடகம் என்று சொன்னதும் ஒருவித சினேகத்துடன் அனுமதித்தார்கள். ஏன் மற்றவர்களுக்கு அனுமதி இல்லையா என்று கேட்டால் “சும்மா வந்துட்டு போட்டோ எடுத்துட்டு போறாங்க , கடுப்பாவுது” என்று பதில் வந்தது.

ரவி ஏற்கனவே பலமுறை அங்கே சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் மக்கள் உரிமையுடன் என்னென்ன வேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொண்டு இருந்தனர்.

ஒரே ஒரு வீடுகூட மிச்சம் இல்லாமல் அனைத்து வீடுகளும் பாதிப்படைந்திருந்தன. பூஞ்சை படியாத ஒரு வீடு கூட இல்லை. சுனாமி  வந்திருந்த நேரத்தில் கடலூரில் இருந்தேன். ஆனால் அதை தூக்கி சாப்பிடும்படி முதல் தளத்தில் இருக்கும்வீடுகள் கூட நாசமடைந்திருந்தன. 30 அடிக்கு எல்லாம் தண்ணீர் போகுமா ?..சும்மா உட்டாலக்கடியா இருக்கும் என்ற எண்ணத்துடன் சென்றால் நேரடி அனுபவம் வேறு மாதிரி இருந்தது. பகுதி எங்கும் சேறு. வீடுகளும் மக்களும் முழுவதும் ஈரமாகவே இருக்கிறார்கள். தொடந்து எதையாவது காயவைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நிவாரணப் பொருட்கள் பெறுவதில் இருக்கும் இடர்களைஅடுக்கிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பழுதடைந்த மின்னணு சாதனங்கள்.
“ண்ணா ..பிஸ்கட்டா தர போறீங்க? ” என்ற கேள்வியை பலமுறை கேட்டபடி வந்து சென்ற சிறுமிகள் அங்கும்இங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.வருபவர்கள் எல்லாம் ஏதோ ஒன்று கொண்டுவருவார்கள் என்ற ஏக்கத்துடனே ஏறிட்டார்கள்
முதல் தளம் தாண்டி தண்ணீர் புகுந்ததை நம்பமுடியாமல் ஒருவர் பழுதாகிப்போன ப்ரிட்ஜ், மிக்சி எல்லாம் தடவிக்கொண்டு இருந்தார்.

என்னென்ன பிரச்சனைகள் சந்திக்கிறீர்கள் என்று கேட்டபோது, இரவானால் நாங்கள் இங்கே தங்குவதில்லை, பயமாக இருக்கிறது அதனால் வேறு இடங்களில் தான்தங்குகிறோம் என்றனர். அங்கே மின்சாரம் இல்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை.  மார்கழி மாதம் நெருங்குவதற்குள் விசேஷம் முடிக்க வேண்டுமென்பதால் மண்டபங்களை விட்டு சிலர் துரத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். இதுகாறும் யார் என்றே தெரியாத ஆட்கள் எல்லாம் தங்கள் பகுதிக்குள் நுழைந்து நைச்சியமாக நிவாரணப் பொருட்கள்  வாங்கிக்கொள்கிறார்கள் என்பதால், தங்களைப்போல் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தேகக் கண்கொண்டே பார்க்க வேண்டியிருப்பதாக கூறினார்கள்.

என்னென்ன வேண்டும் என்று கேட்டபோது , தயங்கித்தயங்கி  நாப்கின் கேட்டார்கள். உள்ளாடைகள் வேண்டுமா என்று கேட்டப்பின்னர், ஆமாப்பா சுத்தமா ஒண்ணுகூட இல்ல என்று சொல்லி , பின் ஒவ்வொன்றாகக் கூறினார்கள்.  ஊரின் தலைமை என்று சொல்லப்படும் ஆள் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு எல்லாத்தையும் அருமையா குடுப்பார் என்றார்கள்.  அனைவரின்கால்களிலும் சேற்றுப்புண். காலால் fiddle வாசிப்பதுபோல் இருந்ததைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

சட்டென்று அங்கே 15 பேர் கொண்ட கோயமுத்தூர்/திருப்பூர் கும்பல் ஒரு கிழவிக்கு  போர்வை கொடுப்பதை ரவுண்டு கட்டி போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.இந்தாமா , இப்படி திரும்பு கொஞ்சம் , கொஞ்சம்  இப்படிமா என்று நான்கு ஐந்து கேமராக்களுக்கு அட்டன்டன்ஸ் போட்டால் தான் போர்வை கிடைக்கும்என்ற துர்பாக்கிய நிலையில் இருந்தார்.  கேமரா பிளாஷ் விழும் அந்த ஒருசில மைக்ரோ வினாடிகள் மட்டும் மிகுந்த அன்புடன் நடத்தப்பட்டார். போர்வை கிடைத்தவுடன் கிழவிகழட்டி விடப்பட்டு அடுத்த ஆளைக் குறிவைத்தன கேமெராக்கள். வெள்ளம் வரும்பொழுது DSLR கேமெராக்கள் வருகின்றனவோ இல்லையோ மறக்காமல் நிவாரண பொருட்கள் வழங்கும்போது DSLR கள் வந்துவிடுகின்றன.

மாடோ, ஆடோ…ஏதோ ஒன்று அருகாமையில் செத்துக்கிடந்ததால்  துர்நாற்றம் வீசத்தொடங்கியது.
காட்டாற்றைப் போல் அடித்துக்கொண்டு வந்த வெள்ளம் உள்ளே இருந்த கோவிலை சூறையாடிவிட்டு சென்றிருந்தது. இரண்டு அடிக்கு மணல் மற்றும் பிளாஸ்டிக். கூவம், அடையாற்றை  எல்லாம் நாம் பயன்படுத்தும் லட்சனத்திற்கு alluvium , silt  எல்லாம் வருமென்று எதிர்பார்க்க முடியாதுதான்.ஆனால் எங்கெங்கு திரும்பினாலும் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பிளாஸ்டிக். எங்கெங்கு காணினும்  குப்பை. கோயிலின் கிரில் கேட்டைப் பார்த்தால் எவ்வளவு பிளாஸ்டிக் ஏரிகளில்  சேகரம் செய்துவைத்திருக்கிறோம்  என்று தெரியவரும். அந்த பிளாஸ்டிக் எல்லாம் அப்புறப்படுத்தாமல் விட்டால் எங்கனம்அடுத்தமுறை நீர் தரையில் இரங்கும் என்றஐயம் மேலிட்டது. விரக்தியுடன் திரிகிறார்கள்.அருகே இருக்கும் ஆறில்  மீன்கள் மனிதனைப்போல் குடித்தனம் நடத்த அனைத்துபொருட்களும் மிதந்தவண்ணம் இருந்தன.
எப்படி அவர்களுக்கு  மீண்டும் எல்லாம் கிடைக்கும் என்ற கேள்விக்கு அவர்களைப் போலவே எங்களிடமும் பதில் இல்லை. அனேக கரையோரப் பகுதிகளின் நிலைமை இதுதான்.

தன்னார்வலர்கள் இருக்கும்வரைபிழைப்பு ஓடும். பின் மீண்டும் ஏதோ ஒரு வருட வெள்ளத்தில் அனைத்தையும் இழப்பார்கள்.  நீர் தேங்கி இருக்கும்வரை சகாயம் ஆட்சிக்கு வரனும் , நடிகர்-நடிகை அறிக்கை, இந்துக்கு உதவும் இஸ்லாமியர், இஸ்லாமியனுக்கு உதவும் இந்து கருத்துக்கள்/ போட்டோக்கள் உலா வரும்.இரக்கம் கிலோ ஒரு ரூபாய் என மலிவாகக் கிடைக்கும் .பின் நகரம் வழக்கம்போலவே தனது முகத்தைக் காட்டத்துத்வங்கிவிடும்.

இதுபோன்ற பகுதிகளில் இருந்துதான் சென்னையை சீரமைக்க , பெருகித்தள்ள, ரோடுபோட ஆட்கள் போகிறார்கள். எல்லாம் செய்துவிட்டு இரவு ஆனதும் தனது குடும்பத்துடன் பயந்து வேறுஇடத்தில தங்குகிறார்கள்  என்பது வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட துன்பியல்.

இதுகாறும் நான்காவது மாடியில் இருப்பவனுடன் ஒரு ஹாய் ஹலோ, ஒருபுன்னகை தவிர்த்து  வேறு எதுவும் பரிமாறிக் கொண்டிருக்காத ஒரு கூட்டத்திற்கு இப்பொழுது அவர்கள் வீட்டில் என்னென்ன ஸ்பெஷல், எத்தனை கழிவறைகள் என்ற அளவிற்குத் தெரிகிறது.இது நகரத்தவர்கள் கூத்து.

என்ன செய்தாலும் பகிர்ந்து உண்டுகொண்டிருந்த ஒரு கூட்டம் இன்று இரண்டு பாக்கெட் ப்ரட்டுக்காக பக்கத்துக்கு வீட்டுக்காரனுடன் சண்டைக்குப் போகிறது. அடுத்தத் தெருஆட்கள் வந்து எதையும் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் ரோந்து போகிறது என்பது Irony.

நான்கு கார்கள், இருபது வண்டிகள்  ரோட்டில் செல்வது தான் இயல்புநிலை என்றால் சென்னை என்றோ இயல்புநிலைக்கு வந்துவிட்டது. இவர்கள் வர குறைந்தப்பட்சம் 8 மாதங்களுக்குமேல் ஆகலாம்.இயல்புநிலை என்ன என்பதன் வரையறை இங்கே ஒன்றே தான். அன்றாடம் தப்பிப்பிழைப்பது.

இங்கே கட்டிவைத்திருந்த கால்நடைகள் , நாய்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தன.  பப்பி என்ற நாய்  தனது எஜமானர்கள் படகில் தப்பிச்செல்லும்முன் அடித்துப்பிடித்து ஓடிவிட்டதாம். ஆறு நாட்களுக்குப் பின்  மெலிந்துபோய் எங்கிருந்தோ வந்திருக்கிறது.  எவரைப் பார்த்தாலும் வாஞ்சையுடன் வால் ஆட்டுகிறது.இப்பொழுது யாரவது அதை தனியாக விட்டு சிறிது நேரம் நகர்ந்தாலும் அழுது ஊளையிடும் அளவிற்கு பயந்து போயிருக்கிறது என்றார் அதை வளர்ப்பவர்.ஒரு நாயின் மனநிலையே இதுதான் என்றால் குழந்தைகள் மனநிலை??

அடுத்த வெள்ளம் வரும்வரை பப்பி அங்கேயே இருக்கும். வெள்ளம் வருகையில் அடித்துப்பிடித்து பப்பி தப்பியோடும். பின் மெலிந்து வந்துசேரும். பப்பியை வாஞ்சையாக யாரவது தடவிக்கொடுத்து பிஸ்கட் போடுவார்கள். பின் மீண்டும் வெள்ளம் வரும்.  நகரம் பப்பிக்கு இரக்கம் காட்டும் ஆனால் பப்பியை பப்பியாகவே வைத்திருக்கும்.

Advertisements

Single Post Navigation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: