மீட்சியைத் தேடி!meeachi theedy
–சௌமியா
அனேகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளைப் பற்றி செய்திகள் வெளிவராத நாளே இல்லை எனலாம். ஒவ்வொரு முறையும் பச்சாதாபத்தோடு அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமைக்காக உச்சுக்கொட்டிக் கொட்டி, நாளடைவில்,’இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா?’ என்ற இயலாமை ஏற்படுகிறது. அந்த இயலாமை அல்லது கையாலாகாத்தனத்தின் காரணமாகவே, அனேகருக்கு கோபம் ஏற்படுகிறது. பலர் இது போன்ற செய்திகளைப் படித்து விட்டு பெருமூச்சு விடுவதோடு நிறுத்திக் கொள்வார்கள். வேறு என்ன செய்ய? மிகச் சிறிய விகிதாச்சாரத்தில் இது போன்ற செய்திகளை, தங்களது உள்மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் அரிப்பைத் தீர்த்துக்கொள்வதற்காகப் படிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், உளவியல் கண்ணோட்டத்தின் படி பார்த்தால், இக்கொடுமைக்கு ஆட்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பது வெறும் உடல்சம்பந்தப்பட்ட பாதிப்பல்ல என்பது வெளிப்படும். சொல்லப்போனால், அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் உடல் சம்பந்தப்பட்ட பாதிப்பை எளிதில், விரைவில் எதிர்கொண்டு விடலாம். ஆனால், அவளை மனரீதியாகத் தேற்றி இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதே அவரது உற்றார், உறவினர் மற்றும் மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக அமைகிறது.
பாலியல் பலாத்காரம் விபத்தா? பிற விபத்துக்களோடு ஒப்பிட்டால், பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண்ணுக்கு மருத்துவ உதவியோடு, மனோதத்துவ உதவியும் தேவைப்படுகிறது. முதலில் அந்தப் பெண்ணை வன்புணர்ச்சி என்ற பயங்கரமான அனுபவத்திலிருந்து மீள வைக்கிற முயற்சியே மிக முக்கியமானது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குத் தேவைப்படுகிற மருத்துவ உதவியுடன், அவள் தன்னை சுதாரித்துக்கொள்ள வைக்கிற முயற்சிகளும் ஒருங்கிணைத்தே மேற்கொள்ள வேண்டி வரும்.
அந்தப் பெண்ணுக்கு, திடீரென்று அனைவரின் மீதுள்ள நம்பிக்கையும் மறைந்து போயிருக்கும். அந்தப் பதற்றத்தில் அவளால் எதையும் ஓர்நிலைப் படுத்தி சிந்திக்க முடியாது. அப்போது அவளுக்குள்ளிருக்கும் உணர்வுகள் சந்தேகம், அச்சம் இவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும் என்பதே உண்மை. அவளுக்கு உடனடியாகத் தேவை, சற்று அமைதி! சிறிது தனிமை! நிறைய ஆறுதல்! அவரது அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான நெருங்கிய உறவினர்கள், சினேகிதிகள் உடனிருப்பது மேலும் பயனளிக்கும். பெரும்பாலும் அந்தப் பெண் மருத்துவ சிகிச்சைக்கே முதலில் உடன்பட மாட்டாள். சில பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பகிர்ந்து கொள்ள வெட்கப்பட்டு, உற்றார் உறவினர்கள் குறித்த விபரங்களை அளிக்க மறுப்பதும் உண்டு. இந்த நேரத்தில் அவளுக்குத் தேவை, ஆதுரமான வார்த்தைகள் மட்டுமே!
அப்போதைக்கு அந்தப் பெண்ணுக்குத் தேவை தேற்றித் தோள் கொடுக்க மனப்பக்குவம் கொண்ட நல்லுள்ளங்களின் துணை மட்டுமே! அது தேர்ச்சி பெற்ற ஒரு மருத்துவராகவோ, திறமை வாய்ந்த மனோதத்துவ நிபுணராகவோ,அல்லது அந்தப் பெண்ணின் மீது பாசம் கொண்ட உறவினர், சினேகிதியாகவோ கூட இருக்கலாம். அதே நேரத்தில் தயக்கம், வெட்கம், பயம் காரணமாக மருத்துவ உதவிக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள விரும்பாத அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தி, அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவன் யாரென்பதைக் கண்டு கொள்ள வேண்டியதும் மிக மிக அவசியம். உடனடியாக நடைபெறாவிட்டாலும், இந்தத் தகவலை அந்தப் பெண்ணிடமிருந்து தெரிந்து கொண்டே தீர வேண்டும். குற்றவாளி தப்பித்துச்செல்ல ஒரு வாய்ப்பை அளித்து விடக் கூடாது.
இத்தனை மனக்குமுறல் மற்றும் கொந்தளிப்புக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு survival-mode என்று சொல்லப்படுகிற மீளுதலுக்கான உந்துதல்கள் மூன்று வகையாகக் காணப்படும். அச்சம், ஆத்திரம், விரக்தி அல்லது சுயபச்சாதாபம் என்பவையே இவை. இவற்றின் காரணத்தால் மருத்துவ உதவி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ள படியால், மனோதத்துவ உதவியும் தேவைப்படலாம்.
அவை பற்றித் தொடர்ந்து எழுதுவேன்.